சுவையான கறிவேப்பிலை குழம்பு

 கறிவேப்பிலை நம் வீட்டுக் கொல்லையில் கிடைக்கும் ஒரு எளிய உணவுப் பொருள். ஆனால் இதன் மூலமாகக் கிடைக்கும் சத்துகளும் பலன்களும் அபரிமிதமானவை. குறிப்பாக இரும்புச் சத்து மிகுதியான உணவுப் பொருள் இது.

கறிவேப்பிலையை உணவில் பயன்படுத்தி தூக்கி எறியும் பழக்கத்தை முதலில் தூக்கி எறியுங்கள். இதனை துவையலாக, சட்னியாக, ரசமாக என பல வடிவங்களில் சாப்பிட முடியும். குழம்பாகவும் வைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலை குழம்பு தயார் செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.

கறிவேப்பிலை குழம்பு தயாரிக்க தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 2 கப்

புளி – ஒரு எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு:

உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6 – 8

தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு:

நெய் அல்லது எண்ணெய் – 2 டீ ஸ்பூன்

கடுகு – ஒரு டீ ஸ்பூன்

சீரகம் – ஒரு டீ ஸ்பூன்

கறிவேப்பிலை குழம்பு செய்முறை

வறுத்து அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒவ்வொன்றாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதனோடு, ஃபிரெஷ் கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்துத் தாளித்து, கரைத்து வைத்திருக்கும் புளியை அதில் சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை இந்தக் கலவையை சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை விழுதை இத்துடன் கலந்து, நன்கு கொதித்து உங்களுக்குத் தேவையான பதம் (அடர்த்தியாகவோ கொஞ்சம் நீர் நிலையிலோ) வந்தபிறகு இறக்கிவிடலாம்.
இப்போது சுவை மற்றும் ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை குழம்பு தயார். புளிக்குப் பதிலாக மாங்காய் சேர்த்தும் இந்த குழம்பைச் செய்யலாம்.

காய்கறி எதுவும் இல்லாமல் மலிவான விலையில் சுவையான சத்தான உணவாக கறிவேப்பிலை குழம்பு அமையும். ஒருமுறை செய்து பார்த்தால், உங்களுக்கு இது பிடித்துப் போகும்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.