அனைவருக்கும் பிடித்த சுவையான ஜாங்கிரி செய்யும் முறை

 தேவையானவை


உளுத்தம் பருப்பு – கால் கிலோ
பச்சை அரிசி – ஒரு பிடி
சீனி – அரை கிலோ
ஆரஞ்சு நிற பவுடர் – சிறிது
ரோஸ் எசென்ஸ் – இரண்டு சொட்டு
எண்ணெய் – அரை லிட்டர்
கனமான துணி – ஒரு சதுர அடி

செய்முறை.. 

முதலில் உளுத்தம் பருப்பையும், பச்சை அரிசியையும் சேர்த்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பருப்பையும், அரிசியையும் ஒன்றாய் சேர்த்து கிரைண்டரில் இட்டு, தண்ணீர் அதிகம் வி
டாமல் சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் கலர் பவுடரைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

மாவு அரைக்கும் போதே சீனியுடன் ஒரு அரை டம்ளர் தண்ணீர் விட்டு இளம் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி அதனுடன் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

ஜாங்கிரி பிழிவதற்கு சற்று கனமான, ஒரு சதுர அடி அளவுள்ள துணியை எடுத்துக் கொள்ளவும். துணியை நான்காக மடித்து நடுவில் சிறிய துளை இட வேண்டும். அரைத்த மாவினை துணியின் மையத்தில் வைத்து,  அழுத்தினால்  மையத்தில் உள்ள ஓட்டையின் வழியாக மாவு வருமாறு செய்து கொள்ளவும்.

இப்போது வாயகன்ற அடி தட்டையான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.  எண்ணெய் சூடானதும் துணியில் உள்ள மாவை ஜாங்கிரிகளாகப் பிழிந்து வேகவிடவும். 

ஜாங்கிரி ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக விடவும். அதிகம் வெந்தால் முறுகி விடும். பதமாக வேக வைக்கவேண்டும்.

இரண்டு புறமும் பதமாக வெந்தவுடன்  எண்ணெயினை வடித்து எடுத்து சீனிப் பாகில் போடவும்.பாகில் சற்று நேரம் ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும். 

இப்போது  மிகவும் சுவையான, சூடான ஜாங்கிரி தயார்

No comments

Theme images by sandsun. Powered by Blogger.